தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மென்பொறியாளர் வீட்டில் சிலைக்குவியல்...3வது முறையாக அதிரடி சோதனை...14 உலோக சிலைகள் பறிமுதல்! - அமெரிக்க மென்பொறியாளர்

சென்னையில் மென்பொறியாளர் வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 3வது முறையாக நடத்திய சோதனையில், மேலும் 14 சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மறைந்த சிலைக் கடத்தல் குற்றவாளி தீனதயாளனிடம் இருந்து சிலைகளை மென்பொறியாளர் வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Stautes Seized
சிலைகள் பறிமுதல்

By

Published : May 15, 2023, 10:20 PM IST

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ஷோபா மற்றும் அவரது கணவர், அமெரிக்காவில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த மாதம் இருமுறை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 தொன்மையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.

3வது முறையாக சோதனை:இந்நிலையில், ஷோபாவின் வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறையில் மே 15 ஆம் தேதி சிலைக் கடத்ததல் தடுப்பு பிரிவு போலீசார் 3வது முறையாக சோதனை நடத்தினர். அப்போது 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக 22×11 செ.மீ நீளமுள்ள ராமர் உருவம், உருளை மீது நந்தி, ஜோடி புருஷா, கலைகாளி, நடராஜர் சிலைகள், விஷ்ணு, துறவி உள்ளிட்ட தஞ்சாவூர் ஓவியங்கள், பாயும் குதிரை, நின்ற யாளி, அனுமன் மண்டியிட்ட மரசிற்பங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

'அருங்காட்சியகத்தில் வாங்கினேன்': இதுகுறித்து ஷோபாவிடம் போலீசார் விசாரித்த போது, பெங்களூருவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ரூ.6 லட்சம் கொடுத்து சிலைகளை வாங்கியதாகவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் நேரில் வந்து ஆவணங்களை சமர்பிப்பதாக ஷோபா தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஓவியங்கள்

ஷோபாவுக்கு சம்மன்: பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் மறைந்த பிரபல சிலைக்கடத்தல் குற்றவாளி தீனதயாளனிடம் இருந்து 2008 முதல் 2015ம் ஆண்டு காலகட்டத்தில் ஷோபா வாங்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டில் அருங்காட்சியகம் வைப்பதற்கும், வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி, சிலைகளை ஷோபா வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

துப்பு துலங்கியது எப்படி?:சிலைக்கடத்தல் குற்றவாளி மறைந்த தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தை சோதனை செய்த போது அங்கு ஷோபா குறித்து சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. 3 முறை நடத்தப்பட்ட சோதனையில் 86 விலை மதிப்பு மிக்க சிலைகள், சிற்பங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக கோயில் சிலைகள்?: கைப்பற்றப்பட்ட சிலைகளில் 10 சிலைகள் தமிழகத்திலுள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறையினரிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிலைகள்: ஷோபா வீட்டில் இதுவரை 3 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்திராணி சிலை, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வாராஹி அம்மன், வீரபத்திரர், 89 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தட்சிணாமூர்த்தி, 76 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கிராம தேவதை, 80 சென்டிமீட்டர் நீளம் கொண்ட சாமுண்டா சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அனுமன் கற்சிலை, 24 மீட்டர் நீளம் கொண்ட வைஷ்ணவி, 66 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு, 60 சென்டிமீட்டர் நீளம் கொண்ட துர்கா, 65 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கருடா, 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட விஷ்ணு, 67 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கணபதி, 24 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரம்மா, நவ கிரக கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வெல்ல ஆலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. ஜேடர்பாளையம் சம்பவத்தில் அமைச்சர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details