தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திகை தாக்கல் செய்துள்ளீர்கள் - உயர் நீதிமன்றம் கேள்வி? - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் மாணிக்கவேல்

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, பொன். மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

idol-wing-special-case-hearing-in-high-court

By

Published : Nov 20, 2019, 10:42 PM IST

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அறிக்கைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக உள்ள கூடுதல் டிஜிபியிடம் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பொன். மாணிக்கவேல் பின்பற்றவில்லை என்பதோடு, அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை டி.ஜி.பி நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன். மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை எனவும், குழுவில் உள்ள மற்ற அலுவலர்களையும் கூட்டங்களில் பங்கேற்கவிடாமல் தடுப்பதாகவும் அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி பொன். மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

பொன். மாணிக்கவேல் கூறும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அரசிடம் கேள்வியெழுப்பும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சிலைக் கடத்தல் வழக்குத் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யாத பொன். மாணிக்கவேலிடம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை எனவும் தெரிவித்தார்.

பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு கடந்த இரண்டாண்டுகளில் 31 கோடியே 96 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், பொன். மாணிக்கவேல் இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து , சிறப்பு அலுவலராக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை அடிப்படையாக வைத்தே இந்த வழக்கை முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பொன். மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ், கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொன். மணிக்கவேலை சிறப்பு அலுவலராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், 6 மாதத்திற்கு பிறகே உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு உறுதி செய்யப்பட்டதாகவும், பணி செய்யவிடாமல் அரசு தடுத்த நேரத்தில் சில விளக்கம் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பொன். மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழ்நாடு அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன். மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதையும் படிங்க: சாம்பார் உப்பு ஏரியில் 15 ஆயிரம் ‘இடம்பெயர் பறவைகள்’ உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details