தமிழக அரசுக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இது குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணைக்கு உரிய அலுவலர்கள் ஒத்துழைக்கவில்லை. சிலை கடத்தல் வழக்குகள் முறையாக விசாரணைக்கு மாற்றப்படவில்லை. தமிழக அரசிடம் இருந்து 2017 ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 21 வழக்குகளில் 2 வழக்குகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள் மாற்றப்படவில்லை. 43 வழக்கு ஆவணங்களை காணவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என்று வாதிட்டார்.
இதற்கு, "நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய முடியும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்ற மனுதாரரின் குற்றச்சாட்டை மனுதாரர் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். தமிழக அரசு, நீதிமன்றம் உத்தரவிட்டால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்யப்படும்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
விசாரணைக்கு பின்னர், "உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தும் உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் தலைமை செயலாளர் உட்பட நான்கு பேரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்படும்" என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.