திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர முடையார் கோயிலிலிருந்து 37ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அடிலைட் (Adelaide) அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. 1982ஆம் ஆண்டு சிலை காணாமல் போன சமயத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆய்வறிக்கைகளை வைத்து ஆஸ்திரேலியாவில் இருப்பது தமிழ்நாடு கோயில் சிலை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் முதல் தகவல் அறிக்கையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுத்துள்ளனர். சிலையை மீட்க ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் துணைக் கமிஷனர் கார்த்திகேயன் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து நடராஜர் சிலை டெல்லி கொண்டுவரப்பட்டு இன்று சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், நடராஜர் சிலை மீட்கப்பட்டதற்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். அவர்களால் தான் இந்த குழுவே உருவாக்கப்பட்டது. இந்தச் சிலை மீட்கப்பட்ட பெருமை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்களையே சேரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், 'சிலைகள் காட்சி பொருள்கள் அல்ல. வெளிநாடுகளில் இருந்து சிலைகள் கொண்டுவரப்படவேண்டும் என பல கடிதங்கள் அப்போதைய டிஜிபி ராஜேந்திரனுக்கு எழுதியும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
சென்னை வந்தடைந்த நடராஜர் சிலை இன்னும் 20 சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வர வேண்டும். அரசுத்தரப்பில் ஒத்துழைப்பு வழங்கினால் நாங்கள் அனைத்து சிலைகளையும் மீட்போம். சிலை மீட்கப்பட்டது தொடர்பாக அரசுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். சிலைகள் மீட்கப்படும் செலவுகள் ஏதும் அரசிடம் இருந்து வரவில்லை. பல முறை உள்துறை செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் ரயிலில் பயணித்து வருகிறோம். எங்களுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்' என்றார்.