சென்னை: 10 ஆண்டுகளாக அரசு மதுபானத்தை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்று வந்த பெண்ணின் மனதை மாற்றி, நடமாடும் உணவு கடை ஒன்றை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வைத்துக் கொடுத்துள்ளனர்.
பாலம்மாள் என்ற பெண் 10 ஆண்டுகளாக அரசு மதுபானத்தை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார். அரசு மதுபானத்தை தொடர்ச்சியாக கள்ள சந்தையில் விற்று வந்த குற்றத்திற்காக போலீசார், பாலம்மாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வந்துள்ளனர்.
பாலம்மாள் இதே வழக்கில் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருவதைக் கவனித்த காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ், அப்பெண்ணிடம், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்பொழுது அந்த பெண் பாலம்மாள், தனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது எனக் கூறியுள்ளார்.
இவர், ஒவ்வொரு அரசு விடுமுறையிலும் மதுபானங்களை விற்பனை செய்து, தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில், ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் பாலம்மாளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒவ்வொரு அரசு விடுமுறையிலும் இது போன்ற வழக்குகளில் உங்களை கைது செய்வது தங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்றும், வேறு என்ன தொழில் உங்களால் செய்ய முடியும் எனவும் தொடர்ச்சியாக கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த பாலம்மாள், “இந்த தொழிலை தவிர நான் வேறு எதுவும் செய்ய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
இதனை அடுத்து 10 நாட்களுக்கு மேலாக பாலம்மாளின் மனதை மாற்றி, அவருக்கு உணவுக் கடை ஒன்றை அமைத்து தருவதாக உதவி ஆணையரும் காவல் ஆய்வாளரும் தெரிவித்துள்ளனர். கடைசியாக பாலம்மாள் அதை ஏற்றுக்கொண்டார். மேலும் மகளும் சம்மதிக்கவே ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ், அவருடைய சொந்த செலவில் தள்ளுவண்டி மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் உபயோக பொருட்களை நேற்று (செப்.2) மாலை வழங்கினார்.
காவல் துறையினரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக, குற்றவாளிகளை பிடித்தோமா, கைது செய்தோமா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தோமா என்று இல்லாமல், குற்றவாளிகள் திருத்தும் வகையில் அவர்களால் வேறு தொழிலும் செய்ய முடியும் என்பதை ஐஸ் ஹவுஸ் காவல்துறை நிரூபித்து காண்பித்துள்ளது.
இதையும் படிங்க:நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை.. அரசு உதவிக் கரம் நீட்டுமா என தாய் எதிர்பார்ப்பு!