சென்னை:கோட்டூர்புரம், காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று (ஜூன்.4) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின்போது, பூங்காவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி நல்ல முறையில் உள்ளதா எனப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபாதைகளை நல்ல முறையில் பராமரிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பூங்காவிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் பூங்காவில் உள்ள வசதிகள் மற்றும் குறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, 171 வார்டுக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் தெருக்களைச் சுத்தமாகப் பராமரித்திட ஆலோசனை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், எம்.ஆர்.சி. நகரில் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை நடப்பட்ட மரக்கன்றுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், பின்னர் அங்கு புதிய சாலைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார்.