சென்னை: தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி மீது இரண்டு பக்கம் கொண்ட புகார் கடிதம் ஒன்றை ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நார்னாவரே (Dr.Manish Narnaware IAS) தமிழ்நாடு தலைமை செயலாளர் வி.இறையன்புவிற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மனிஷ் அப்போதைய ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி தன்னை அனைவரும் முன்பு அவமானப்படுத்தியதாகவும், தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருப்பதால், சாதி ரீதியாக தன்னை ஒதுக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மேலும் மனிஷ் எழுதிய கடிதத்தில், "நான் வேலையில் இருந்தபோது தற்போது, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளராக பதவியேற்றுள்ள ககன்தீப் சிங் பேடியினால் பெரும் இன்னல்களை சந்தித்தேன். மேலும் பேடி என்னை மிகவும் மன உளைச்சளுக்கு உள்ளாக்கினார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்பது தான். பேடிக்கு இந்த விஷயத்தை தெரிந்து வேண்டுமென்றே என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்” என்று மனிஷ் தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.
தனது கடிதத்தில் ககன்தீப் சிங் பேடி அனைத்து வழிகளிலும் தன்னை துன்பப்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ள மனிஷ், பேடி ஒரு முறை, ஒரு வழக்கு சம்பந்தமாக இரவு 8.30 மணிக்கு மேல் மயானம் மூடியிருக்கும் என தெரிந்தும் அந்த நேரத்தில்தான் என்னை அங்கே ஆய்வுக்கு அனுப்பினார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 40 அலுவலர்கள் கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் தேவையில்லாத காரணங்களுக்காக என்னை அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தினார் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி புகார் "எனக்கும் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணனுக்கும் இடையே பல முறை விரோதம் உருவாக்க பேடி முயற்சி செய்து இருக்கிறார். மேலும் எனது சாதி குறித்தும், புத்த மதத்தை பின்பற்றும் நான் ஏன் உஜ்ஜைனி கோயிலுக்கு செல்கிறேன் என்பது குறித்தும் என்னிடம் கேள்வி எழுப்பினார்" என மனிஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மனிஷின் சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்திட பேடி தாமதம் செய்வார் எனவும், தினமும் அந்த கையெழுத்திற்காக ஒரு நாளில் பல மணி நேரம் காக்க வைப்பார் எனவும் மனிஷ் கூறியுள்ளார். இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டு போன ஈரோடு துணை கலெக்டர் மனிஷ், இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஜூன் 14, 2021 முதல் ஜூன் 13, 2022 வரை நடந்தது என குறிப்பிட்டுள்ளார்.
தனது கடிதத்தில் பேடி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்த மனிஷ், இந்த தொந்தரவால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இது போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதாகவும் அவர் தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேடியிடம் எடுத்துக் கூறியும் அவர் இது குறித்து கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி புகார் இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான டி.ரவிக்குமார் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மனிஷ் நர்னாவாரே IAS தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி IAS பற்றிக் கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது.
பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன். அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை. அவர் மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை. உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு. பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மனிஷ் நர்னாவாரே தொலைபேசி வாயிலாக நம்மிடம் கூறும்போது, "எனது கடிதத்தில் குறிப்பிட்டவை அனைத்தும் உண்மையான தகவல்கள். மேலும் இதற்கான நியாயம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார். மேலும், இது குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி (ஓய்வு) எம்.ஜி தேவசகாயம் கூறுகையில், "இந்த கடிதத்தில் எந்த ஒரு முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே கடிதத்தை எழுதிய அதிகாரி குற்றத்தை ஆதாரப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இதன் மூலம் ஐஏஎஸ் அதிகாரி தன்னைப் போன்ற சக ஐஏஎஸ் அதிகாரியை சாதிய ரீதியான கண்ணோட்டத்துடன் அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு மக்கள் பணியாற்ற அதிகாரி ஒருவர் சாதிய ரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவிற்கு கடிதம் எழுதி தனது மன உளைச்சலை தெரிவித்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நான் எப்படி உயிரோடு இருக்கேன்னு தெரியல" - ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய சென்னை தரணி கூறிய தகவல்!