சென்னை:பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகக்கூறி பாஜகவில் இருந்து ஆறு மாத காலங்கள் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "5 பைசா ஆதாயம் இல்லமல் கடன் வாங்கி மக்களுக்கு உதவி செய்தேன். 8 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்து உள்ளேன். உண்மையைப் பேசியதால் என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளர்கள். நான் பாஜகவிற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறுவது தவறு. எனது கருத்துகளை கேட்காமலேயே கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். என்னிடம் எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. என் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.
திட்டமிட்டு பதவியில் இருந்து நீக்கினர்:கலாசாரப் பிரிவு தலைவராக இருந்தபோதே என்னை திட்டமிட்டு அப்பதவிலிருந்து விலக்கினர். பெப்சி சிவா மீது நான் ஏற்கெனவே புகார் அளித்தபோது, என்னை தான் பதவியில் இருந்து நீக்கினர். பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகி செல்வகுமார் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி கருத்துகளைப் பதிவிட்டதால், நான் எனது கருத்தைப் பதிவிட்டேன். என்னை அடித்தால் நான் திருப்பி அடிக்கும் கேரக்டர். நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக, யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால், அவரையும் நான் எதிர்ப்பேன்.