சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். கட்சியில் இணைந்த அவரை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், "தமிழ்நாடு அரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர் சந்தோஷ் பாபு. 8 ஆண்டுகள் இன்னும் பதவி இருக்கும் போது ராஜினாமா செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என வெளியே வந்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்தது மக்கள் நீதி மய்யம் கட்சி. இன்னும் நல்லவர்கள், வல்லவர்கள் கட்சியில் இணைய வேண்டும். பல நல்லவர்கள் என் கட்சியில் இணைவதற்கு நல்ல சூழ்நிலை ஏற்படுத்துவதே எனது வேலை.
'தேர்தலையொட்டி ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்'- கமல்ஹாசன் ஒரு கூட்டத்திற்கு 200பேர் மட்டுமே அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதனால் சுற்றுப்பயண தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். தற்போது நடக்கும் அரசியலில் எனக்கு திருப்தி இல்லை. அதிக இடங்களில் ஊழல் உள்ளது. ஊழல் இல்லாத நிலை மாறவேண்டும்.
எந்த நேரத்தில் கூட்டணி பற்றி பேச வேண்டுமோ அந்த நேரத்தில் மட்டுமே பேச வேண்டும். வருக்காலத்தில் கூட்டணி மாறும். 50 ஆண்டுகளாக மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்கிறார்கள். அனைத்துப் பேரிடர் காலத்திலும் அவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அங்கு வாழும் சிலர் வேறு ஒருவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுகின்றனர். அரசிடமிருந்தே மக்கள் முறைகேடுகளை கற்றுக்கொள்கிறார்கள். விரைவில், வேறு இடத்தில் அவர்களை மாற்ற வேண்டும்.
விவசாயிகளின் குரலை கவனிக்க வேண்டும், நசுக்க கூடாது. தேர்தலின்போது ரஜினியிடம் கண்டிப்பாக ஆதரவு கேட்பேன். திரையுலகில் எனக்கும் ரஜினிக்கும் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. அதேபோல் அவர் அரசியலுக்கு வந்தாலும், போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது" என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ், "இக்கட்சியில் இணைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய பெரிய விஷயங்களை பற்றி விவாதிக்கும் நாம் சிறிய விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. பல்வேறு பாகுபாடுகளை மாற்றுவதற்கு மக்கள் நீதி மய்யம் உள்ளது. ஒரு மாற்றத்திற்காக இதில் இணைந்துள்ளேன். தலைவர் கமலஹாசனால் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ் பாபு