திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. அதில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைமிக்க பொதுச்செயலாளர் தகுதிக்கு நான் போட்டியிட அனுமதியளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், என்னை போட்டியின்றி அப்பதவிக்கு தேர்ந்தெடுத்த தலைமை, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் வரலாற்று சிறப்புமிக்க முக்கியத்துவம் என்னவென்றால், நம் வணக்கத்திற்குரிய தலைவர்கள் அமர்ந்து நிர்வாகம் செய்த இடத்தில் அமரப்போகும் நான், அந்த தலைவர்களின் புகழுக்கும், கீர்த்திக்கும் பங்கம் ஏற்படா வண்ணம் நடந்து கொள்வேன் என்று உறுதி கூறுவதோடு, திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணங்களுக்கு ஏற்ற வண்ணம் நடந்து கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடுபடுவேன் என்பதையும் உறுதி செய்கிறேன்.
மேலும் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வானதை அடுத்து நேரில் வந்து பாராட்டிய திமுகவினருக்கும், தொலைபேசி மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் மற்றும் நேரில் வந்து வாழ்த்து சொன்ன பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய கட்சி தலைவர்களுக்கும் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டெல்லி விரைந்த டிடிவி!