சென்னை: சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இப்பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத்தொகை வழங்கப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பயனாளிகளுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத்தொகையை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்றத்தொகுதியில் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளுக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னுரிமை அளிக்கிறார். தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன.
கொய்யாத்தோப்பு பகுதிகளில் ஏற்கெனவே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. தற்போது நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் குடியிருப்புகள் கட்டுவதற்கானப் பணிகள் தொடங்கியுள்ளன. திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையானதை முதலமைச்சர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார். முதலமைச்சர் வழியில் மக்களுக்கு உழைக்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.