மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.
அதன்படி, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தருவதற்கு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புதல் அளித்து நிறைவேற்றின. இதற்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், மசோதாவை எந்தவித காரணமும் சொல்லாமல் குடியரசு தலைவர ராம் நாத் கோவிந்த் திருப்பி அனுப்பியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனம் தெரிவித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்டேசன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக இரண்டு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆனால் அவற்றை எந்த காரணமும் சொல்லாமல் குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார்.
மத்திய அரசு 11 கல்வி நிறுவனங்களுக்கு என்ன காரணம் கொண்டு விலக்கு கொடுத்திருந்தாலும், அது முதலிலே விலக்கு கொடுத்திருக்க வேண்டியது தமிழ்நாடிற்குத்தான். தமிழ்நாட்டின் நலனையும், குரலையும் தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய அரசுக்கு எதிராக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்”. எனத் தெரிவித்துள்ளார்.