சென்னை:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் ரூபாய் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விஜயபாஸ்கர் நேற்று (அக்டோபர் 18) செய்தியாளரிடம் கூறுகையில், "இன்று (அக். 18) காலை 6.30 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் எனக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 50 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசித்துவரும் வீட்டிலும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் நடத்தினர்கள். இந்தச் சோதனையில் எனது வீட்டில் இருந்து எந்தவிதமான பணம், நகை உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. எனது எல்லா சொத்துகளுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளன. அதைத் தேவைப்படும்போது காண்பிக்கத் தயாராக உள்ளேன்.
சட்ட ரீதியாகச் சந்திப்பேன்
என் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராக உள்ளேன். மிகக் கடுமையான உழைப்பாளியான, என்னை ஊடகங்கள் தவறாகத் திரித்து வெளியிடுகின்றன. கடந்த 23 ஆண்டுகளாக அன்னை தெரசா என்ற அறக்கட்டளை நடத்திவருகின்றோம்.
கடந்த 18 ஆண்டுகளாக எனது சகோதரர்கள் கல்வி நடத்திவருகின்றார்கள். ஆனால், பதவிக்கு வந்தவுடன்தான் இவற்றைச் செய்வதாகத் தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.