சென்னை சூளைமேடு அண்ணாசாமி தெருவைச் சேர்ந்த காயத்ரி, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காயத்ரியின் தாய் ஜெயலட்சுமி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், தனது மகள் காயத்ரி 2017ஆம் ஆண்டு வினோத் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டார். பெண் வீட்டார் சம்மதத்துடன் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முறைப்படி வினோத்துடன் தனது மகள் காயத்ரி திருமணம் செய்துகொண்டார்.
சூளைமேடு அண்ணாசாமி தெருவில் வாடகைக்கு வசித்துவந்த காயத்ரி, திடீரென நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, தனது மருமகன் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தபோது அதிர்ச்சி அடைந்தேன்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக சூளைமேடு காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக, தற்கொலை செய்துகொண்ட காயத்ரியின் கணவர் வினோத்திடம் விசாரணை செய்ததில், காயத்ரியை திருமணம் செய்ததை வினோத் அவரது வீட்டில் தெரிவிக்காமல் இருந்ததாலும், தலை தீபாவளிக்கு காயத்ரியின் வீட்டிற்கு வர மறுத்ததாலும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் காயத்ரியின் செல்போன் எண்ணை வினோத் பிளாக் செய்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் காயத்ரியின் உடல் உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.