சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேடு, ஒண்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரது மனைவி மாரியம்மாள் (26). இத்தம்பதியின் குழந்தைகள் ரித்தீஷ் (6), ராகேஷ் (4). கணேசன், சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாரியம்மாள், கணவன், குழந்தைகளை விட்டுப்பிரிந்து ஊத்துக்கோட்டை அருகே வடமதுரையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதன்பிறகு, கணேசனிடம் இரு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், கணேசன் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்துள்ளார்.
எனவே, தம்பதிக்கு இடையே பிரச்சினை மீண்டும் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் மாரியம்மாள் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, காவல் துறையினர் கணேசனை விசாரணைக்கு முன்னிலையாகும்படி உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அவர் முன்னிலையாகவில்லை. இரு குழந்தைகளுடன் வீட்டிலிருந்து திடீரென மாயமாகிவிட்டார்.
அவரையும் குழந்தைகளையும் உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். மூவரையும் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, கணேசனின் சகோதரி அனுராதா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் கணேசனையும், இரு குழந்தைகளையும் தேடிவந்தனர்.