தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் மோசடி - கணவன், மனைவி கைது - பண மோசடி புகாரில் கணவன், மனைவி கைது

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கணவன், மனைவி இருவரும் 47 லட்சம் ரூபாய் மோசடி செய்து வெளியூர் தப்பிச்செல்ல முயன்றபோது காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் மோசடி - கணவன், மனைவி கைது
சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் மோசடி - கணவன், மனைவி கைது

By

Published : Jan 9, 2022, 9:25 PM IST

Updated : Jan 9, 2022, 10:27 PM IST

சென்னை:சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருபவர், ராஜ கணேஷ்.

இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தீபன்ராஜ் (32) என்பவர் நிறுவனத்தின் பணம் 47 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு, தப்பிச்சென்று விட்டதாகத் தெரிவித்து இருந்தார்.

அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வண்ணாரப்பேட்டை துணை காவல் ஆணையாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் பீர்பாஷா, புவனேஷ்வரி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

விசாரணையில், இதே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த திரவியசுந்தரம்(61) என்பவரின் மகன்தான் தீபன்ராஜ் என்பதும், திரவியசுந்தரமும், தீபன்ராஜும் சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தனித்தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

வெளியூர் தப்பிச்செல்ல முயற்சி

தந்தையின் சிபாரிசின் மூலம் தீபன்ராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும், அதன் பின்னர் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்த யுவராணி (32) என்பவரைக் காதலித்து, கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதும், திருமணம் செய்துகொண்ட பிறகு வேப்பம்பட்டு பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு வங்கி மூலம் 26 லட்சம் ரூபாய் லோன் வாங்கி தனியாக வீடு கட்டி வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தீபன்ராஜ், யுவராணி, திரவியசுந்தரம் குறித்து தனிப்படை காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்நிலையில் தீபன்ராஜ் இன்று (ஜன.9) ஞாயிறு முழு ஊரடங்கைப் பயன்படுத்தி வெளியூர் தப்பிச்செல்ல இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடசென்னையின் அனைத்துப்பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜாஜி சாலையில் சென்ற வாகனத்தை சோதனை செய்தபோது, தீபன்ராஜ் மற்றும் அவருடைய மனைவி யுவராணி இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு

விசாரணையில், தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.47 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததை தீபன்ராஜ் ஒப்புக்கொண்டார்.

இதற்கு உதவியதாக அதே நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்த்து வந்த தீபன்ராஜின் மனைவி யுவராணி இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

கையாடல் செய்த பணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது, பணத்தை கேசினோ வகையிலான ஆன்லைன் விளையாட்டு தளம் ஒன்றில் சூதாட்டம் ஆடி, பணம் அனைத்தையும் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், பணம் கையாடல் செய்தது குறித்து நிறுவனத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்ததால், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதிக்கு தப்பிச்சென்று பேக்கரியில் சப்ளையர் ஆக வேலைக்குச்சேர சென்றபோது காவல்துறையினரிடம் சிக்கியதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீபன்ராஜிடம் இருந்த 48 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து, அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

Last Updated : Jan 9, 2022, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details