சென்னை:இரண்டாம் நிலை மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் எம்.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பிட வேண்டும் எனவும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உருவாக்கிட வலியுறுத்தி நாளை சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்தரநாத் கூறும் போது, மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை 2 காலிப் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு வைத்து, இட ஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் விரைந்து நிரப்பிட வேண்டும்.
கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணியிடங்களை நியமிக்கும் அரசாணை எண் 401ஐ ரத்து செய்திட வேண்டும். பணி நியமனத்தின் போது சீனியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கருணை அடிப்படையில், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில், ஆய்வக நுட்புநர் நிலை - 2 காலிப் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு வைத்து, இட ஒதுக்கீட்டையும் பின்பற்றி நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
மருத்துவ ஆய்வக நுட்புநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஒப்பந்தம், தற்காலிகம், அவுட்சோர்சிங் போன்ற பணி நியமன முறைகளை கைவிட வேண்டும். நிரந்திர அடிப்படையில் மட்டுமே நியமனங்களை செய்திட வேண்டும். மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் நலன் காத்திடும் வகையில் தனி கவுன்சில் அமைத்திட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல்படி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவ ஆய்வக நுட்புநர் நிலை2 ( Grade -2), புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.