சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2023ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் இடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, 'உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் காப்பீட்டுத் திட்டங்களில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. கடந்த ஆண்டு 2022 ஜனவரி 10ஆம் தேதி அன்று 5 ஆண்டிற்கு இந்த திட்டம் நீடிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
கடந்த ஓராண்டில் மட்டும் இதன் மூலம் 1.39 லட்சம் பயனாளி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.843 என்ற வகையில் ரூ.1,128 கோடி செலவிடப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 7.49 லட்சம் பேர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைந்து இருக்கிறார்கள். மேலும், 1 கோடியே 23 லட்சம் பேர் இந்த திட்டத்தின்மூலம் கடந்த 13 ஆண்டுகளில் பயன்பெற்று இருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் 970 மருத்துவமனையில் இந்த திட்டம் இருந்தது. தற்போது 1,733 மருத்துவமனையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் வாயிலாக 1,027 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 1,513 நோய்களுக்கு இந்த திட்டம் பயன்பட்டு வருகிறது.
சிறப்பு சிகிச்சையாக 8 சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். பல்வேறு விதமான உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த திட்டம் சிறப்பாக உதவி வருகிறது. அரசு மனநல காப்பகத்தில் உள்ள 520 பேருக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.