கடந்த 2018ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலைச் சாலை, தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது சிலர் காலணிகளை வைத்து அவமதிப்பு செய்தனர். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்தச் செயலில் ஈடுபட்டதாக செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் குமார் என்பவரைக் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்கள் முன்பு கைது செய்யப்பட்ட நவீன் குமாருக்கு பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்குத் தொடர்பாக, திராவிடர் கழக திருப்பூர் மாவட்டச் செயலாளர் சண்முகம் ஒரு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், 'பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா ட்விட்டர் (சுட்டுரை) பதிவில் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல; தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என கருத்து பதிவு செய்திருந்தார்.
இந்தப் பதிவுக்கு பிறகு தான், தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை கோரி, அவரின் தந்தை தாக்கல் செய்த மனுவில் தன்னுடைய மகன் ஒரு மனநோயாளி என்று மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கியது. ஆனால், இதுவரை இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கின் நிலை என்ன என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை' என அதில் தெரிவித்திருந்தார்.
பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு, தாராபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க : திரிசூலம் மலையில் திடீர் தீ!