சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத்துறையினரால் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனையில் அவரை சந்தித்த பின் பிற அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஜூன் 15 ஆம் தேதி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர், “அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கையாளப்பட்டதில் மனித உரிமை மீறல் இருப்பதாக தெரிவித்திருந்தார். தன்னை கைது செய்யும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாகவும், தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும் செந்தில் பாலாஜி என்னிடம் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கையாண்டதில் அவர் கீழே விழுந்ததில் பின்னந்தலையில் காயம் அடைந்துள்ளதாக கூறினார். விசாரணையின் போது தன்னை துன்புறுத்திய சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது.