தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் புகார்தாரர் வாதத்தை கேட்காதது ஏன்? மனித உரிமை ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி! - chennai high court news

Thoothukudi Sterlite issue: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் புகார்தாரர் ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம் பெறாதது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

மனித உரிமை ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி!
மனித உரிமை ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 9:56 PM IST

சென்னை:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை, தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று (செப் 27) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை நகல் தமிழக அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று பதில் அளித்தார்.

அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தனது புகார் மனு குறித்து எந்த ஒரு பதிவும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து, தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம் பெறாதது ஏன் என்றும் புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்து உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details