சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், நேதாஜியின் சித்தாந்தத்திற்கு எதிரான பல விஷயங்களை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை எதிர்கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் நேற்றைய தினத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம்’
சென்னை: குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகிறது. எனவே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்களை அமல்படுத்தக் கோரி மார்ச் 8ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் சி.ஐ.டி.யு பெண்கள் ஈடுபடுவார்கள். நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதை அனைவரும் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், வலதுசாரிகள், இன வெறி, மத வெறி உள்ளிட்டவற்றை உருவாக்கி அதன்மூலம் சில இடங்களில் வெல்கிறார்கள்.
காஷ்மீரில் இன்றும் அடக்குமுறைகள் தொடர்கிறது. இணையத்தை முழுமையாக இன்று பயன்படுத்த முடியவில்லை என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். காஷ்மீரில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஜனவரி 26இல் தேசியக் கொடியை ஏற்றி, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளோம். ஜனவரி 27ஆம் தேதி சைதாப்பேட்டையில் பேரணி நடைபெற உள்ளது என்றார்.