சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களை, 'ரிடோ' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டுவரை தங்களுக்கு வழங்க வேண்டிய 30 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதியை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் விடுவிக்காததால், தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனவும், இது மனித உரிமையை மீறிய செயல் என்றும் கூறி, தொண்டு நிறுவன இயக்குனர் லூகாஸ் பாபு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகார் மனுவை மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்தார். விசாரணையின்போது, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், மனுதாரர் நிறுவனத்துக்கு 2015-16ஆம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 94 ஆயிரத்து 76 ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தொண்டு நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை கணக்கிட்டு மூன்று மாதங்களில் வழங்கும்படி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த கோவாக்சின் தடுப்பூசிகள்