சென்னை: தமிழ்நாட்டில் சாலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக 2014ஆம் ஆண்டு 'சாலை வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்' சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், இடத்திற்கான உரிமம் வழங்குதல், சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாத்தல், வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து முறையிட ஓய்வுபெற்ற நீதித் துறை அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்தல், காப்பீட்டுத் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சாலை வியாபாரிகள் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிங்காரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சட்டம் முழுமையான அமல்படுத்தப்படாததால் சாலை வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சட்டம் முழுமையான அமல்படுத்தப்படும் வரை சாலைக் கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தவோ, வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 'சாலை வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்' சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.