தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காய விலையேற்றத்தால் ஊட்டச்சத்து குறைபாடா? - என்ன சொல்கிறார் விவசாய பொருளாதார அறிஞர் கோபிநாத் - விவசாய பொருளாதார அறிஞர் கோபிநாத் பேட்டி

வெங்காயம் போன்ற காய்கறிகளால்தான் அடித்தட்டு மக்களுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. அவர்களால் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட முடியாது என்பதால், காய்கறிகளின் மூலமாகவே ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

how to stabilisation vegetavle and onion price, says Agricultural Economist Gopinath
how to stabilisation vegetavle and onion price, says Agricultural Economist Gopinath

By

Published : Dec 9, 2019, 11:38 PM IST

Updated : Dec 10, 2019, 6:34 PM IST

வெங்காய விலை நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. வெங்காயத்தை அனைவரும் பேசிக்கொண்டிருந்த வேளையில், மறுபுறம் முருங்கைக்காயின் விலை 320 ரூபாய் என்று அதிர்ச்சியூட்டினார்கள். 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்ற பழமொழி கிராமப்புறங்களில் அடிக்கடி சொல்வது வழக்கம்.

அதுபோல் 10 ரூபாய்க்கு விவசாயி விற்பனை செய்யும் பொருள், நுகர்வோர் கைக்கு வருகையில் 100 ரூபாயை தாண்டி விடுகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசிய காய்கறிகள் விலையில் ஏன் அடிக்கடி ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது, இதனைக் கட்டுப்படுத்த அரசுகள் என்ன செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட விலை கிடைக்க என்ன செய்யலாம் போன்றவை குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் விவசாய பொருளாதார அறிஞர் கோபிநாத் கலந்துரையாடினார்.

கேள்வி: வெங்காய உற்பத்தி செய்யும் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 50 விழுக்காடு கர்நாடகா, மஹாராஷ்டிராவில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் அதிகமாகhd பயிரிடப்படுவதில்லை. இந்தச் சூழலில் திடீரென்று அரபிக்கடலில் புயல் ஏற்பட்டால் மேற்குறிப்பிட்ட இரு மாநிலங்களில் அதிக மழை பெய்யும். இதன் காரணமாக வெங்காயப் பயிர்கள் பெரிதளவில் பாதிக்கப்புக்குள்ளாகி, சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து இயல்பாகவே அதன் விலையும் அதிகரிக்கும்.

ஆனால், இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று நினைப்பீர்களானால், கண்டிப்பாகப் பயன்பெற மாட்டார்கள். காரணம் மழையால் அவர்களின் பயிர்கள்தான் பாதிக்கப்படுகின்றன. தற்போது, சந்தைக்கு வரும் வெங்காயம் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளால் பயிடப்பட்ட வெங்காயங்கள்தான்.

அப்போது, குறைந்த விலையில் விவசாயிகளிடம் வெங்காயங்களை வாங்கி சேமித்து வைத்திருக்கும் வியாபாரிகள், விலையேற்றத்தின்போது விற்று அதிக லாபம் பார்க்கிறார்கள்.

விவசாய பொருளாதார அறிஞர் கோபிநாத் பேட்டி

கேள்வி: இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீர்வுகள்தான் என்ன?

பதில்: விலையேற்றத்தைத் தடுக்க காய்கறிகள் பயிரிடப்படும் பகுதிகளை முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு, மேற்குவங்கம் மட்டுமில்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தைப் பயிரிட வேண்டும், மழையால் சில மாநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்களில் விளைவதைக் கொண்டு அதனை சரி கட்ட இயலும்; நுகர்வோரும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்க முடியும்.

நகர்ப்புறங்களிலேயே அதிகளவு தேவை இருக்கும் நிலையில், அதனைச் சமாளிக்க மொட்டை மாடித் தோட்டங்கள் தீர்வாகும். இந்தப் பிரச்னைக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளார். நகர்ப்புறங்களிலுள்ள தேவைக்காக நகர்புறங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய காய்கறிகளை விளைவிக்க வேண்டும்.

விவசாய பொருளாதார அறிஞர் கோபிநாத் பேட்டி

இதன்மூலம் குறிப்பிட்ட நகரங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் வெளிமாநிலங்களைச் சார்ந்திருக்காமல் தன்னிறைவு அடைய முடியும். நகர்ப்புறங்களில் அதிகமான இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. அதுபோன்ற இடங்களில் காய்கறி வளர்ப்புப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். மொட்டைமாடி தோட்டங்களில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும். பருவநிலை மாற்றத்தால் இனி இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுப்பது அவசியமாகிறது.

கேள்வி: காய்கறியின் விலையேற்றத்தால் அடித்தட்டு மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இந்தியர்களின் உணவு வகைகளில் அனைத்து தரப்பு மக்களின் உணவில் காய்கறிகளே பிரதானமாக இருக்கிறது. காய்கறிகளால்தான் அடித்தட்டு மக்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. அவர்களால் பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாது என்பதால், காய்கறிகளின் மூலமாகவே ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். இதனை உணவு மற்றும் வேளாண் அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால், இதுபோன்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

கேள்வி: இதுவரையில் நாம் நுகர்வோர் தரப்புப் பிரச்னையை மட்டுமே பேசிவந்தோம். இயற்கை பாதிப்பிலிருந்தும் சந்தை பாதிப்பிலிருந்தும் தப்பிக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?என்பது குறித்தும் கூறுங்கள்...

பதில்: விவசாயிகளுக்கு வானிலை முன்அறிக்கை சேவையை இன்னும் துல்லியமாக வழங்க வேண்டும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கலாம். மார்க்கெட் இன்டலிஜென்ஸ் என்றழைக்கப்படும் எந்தப் பயிரை எப்போது சந்தைக்கு எடுத்துவர வேண்டும், வருங்காலத்தில் அவற்றின் விலை எப்படி இருக்கும் போன்ற தகவல்களை விவசாயிகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும். உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருளை நேரடியாகச் சென்று நுகர்வோரிடம் விற்பனை செய்யும் திட்டங்களை அதிகரிக்க வேண்டும். அரசின் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

விவசாயப் பொருளாதார அறிஞர் கோபிநாத் பேட்டி

அரசின் இ-நாம் எனப்படும் தேசிய விவசாயச் சந்தையை வலுப்படுத்த வேண்டும். இதனால் பெரு விவசாயிகள் மட்டுமின்றி சிறு விவசாயிகளும் தங்களது உற்பத்தியை அருகிலேயே விற்பனை செய்யும் நிலை ஏற்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு வயல்வெளிகளுக்கு அருகிலேயே சேமிப்புக் கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த நடவடிக்கைகளால், காய்கறிகள் கெட்டுப்போவது தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஏற்ற விலை வரும் நேரத்தில் விற்பனையும் செய்ய முடியும். இந்தமுறை மூலமாக இடைத்தரகர்கள் காய்கறிகளை பதுக்குவதையும் தடுக்க முடியும். இதனால் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைப்பதோடு, நுகர்வோருக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும்.

இதையும் படிங்க: 'கணினி வாங்கினால்,1.5 கிலோ வெங்காயம் இலவசம்' - விளம்பரப் பதாகையால் பொதுமக்கள் வியப்பு!

Last Updated : Dec 10, 2019, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details