சென்னை:சென்னை மாநகரில் தற்போது அதிகமாக பேசப்படுவது, சாலையில், பத்திரமாக செல். மாடு வந்து முட்டி விட போகிறது என்றுதான். ஆம், சென்னை சாலைகளில் தற்போது மாடுகளின் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த கால்நடைகளால், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, திருநின்றவூர், வெளிவட்ட சாலை, சென்னை-செங்கல்பட்டு புறவழிச்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற இடங்களில் கால்நடைகளால் நாள்தோறும் விபத்துக்கள் நிகழ்கின்றன.
கால்நடைகளை வளர்ப்பவர்களின் பொறுப்பற்ற தன்மையே இதற்கான முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைகளால் ஏற்படும் வாகன விபத்துகளால் பெருங்காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, சில நேரம் மனித உயிரும் பறிபோகின்ற நிலை ஏற்படுகிறது.
சென்னை மாநகராட்சி:பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் கால்நடை பிடிக்கும் 15 வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரித்த செலவுத் தொகையுடன் அபராதமாக ரூ.2,000 விதிக்கப்படுகிறது.
இதற்கு அபராதம் மட்டும் தீர்வு என்பது கேள்விக்குறிதான் என பொதுமக்கள் எண்ணுகின்றனர். தற்போது சாலை விபத்து திருவல்லிக்கேணி பகுதியில், 10 நாட்களுக்கு இரண்டு சம்பவங்கள் என நடந்துள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி காலை மாடு முட்டியதில் படுகாயமடைந்து, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம், நேற்று (அக்.28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம்:இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது, "சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 18-ஆம் தேதி காலை மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த சுந்தரம் என்னும் 80 வயது முதியவர், உயிரிழந்தார் என்று செய்திகள் வந்தன.
மாடு முட்டியதன் காரணமாக அவர் இறந்துவிட்டார் என கூற முடியாது. அவருக்கு ஏற்கனவே உடல்நிலை பிரச்னைகள் இருந்துள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையானது நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
கடுமையான நடவடிக்கை:இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “பொது இடங்களில் சுற்றித் திரிந்த 3,853 மாடுகளைப் பிடித்திருக்கிறோம். இதுவரை மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.75.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் அபராதத் தொகையை கட்டி விட்டு, மீண்டும் மாடுகளை சுற்றித் திரிய விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், “கடந்த சில மாதங்களாகவே மாடுகள் பிரச்னைகள் குறித்து சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஆகஸ்ட் மாதம் எம்.எம்.டி.ஏ சம்பவத்திற்குப் பிறகு, மாநகராட்சி மூழு வீச்சில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து வருகிறது. சென்னையில் மாடு வளர்ப்பவர்கள் 36 அடி இடம் இருந்தால் மட்டுமே மாடுகளை வளர்க்க வேண்டும். அவற்றை சாலைகளில் திரிய விடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க மாநகராட்சியில் மாடுகள் பிடிப்பதற்காக 15 வண்டிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் சுற்றும் மாடுகளைப் பிடிக்க தனியாக மாடுபிடிக்கும் வாகனமும், பணியாளர்களும், கால்நடை மருத்துவர்களும் கடந்த 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பசுக்களுக்கு உணவளித்தால் பாக்கியம்:மேலும் இது குறித்து திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “இங்கு மாடு வைத்திருப்பவர்கள் அதிகம். ஆனால் இந்த பகுதியில் பெரும்பாலனோர் மாடுகளைக் கட்டி வைப்பதில்லை. இதனால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பகுதியில் மாடுகள் அங்கும் இங்குமாய் உலா வந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கோயிலுக்கு வரும் பக்தர்கள்,`பசுக்களுக்கு உணவளித்தால் பாக்கியம்' என்று அங்கிருக்கும் கடைகளில் விற்கும் அகத்திக்கீரை, பழங்கள் ஆகியவற்றை வாங்கி உணவாக மாடுகளுக்குக் கொடுக்கின்றனர். இதனால் பசுக்கள் அங்கையே சுற்றிக் கொண்டு இருக்கின்றன. சில நேரங்களில் கோயில் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மாடுகள் கூட வெளியில்தான் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
அண்மைக் காலமாக சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க மாநகராட்சியும் அபராதம் விதித்து மாடுகளை பிடித்துச் சென்றாலும், தற்போது வரை இந்த பிரச்னைக்கான தீர்வு என்பது கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க:காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வு சாத்தியமா? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன?