சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறத்துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு 2024 ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், இந்த தேர்வுக்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுதி தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களின் தகுதித் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து அது சரியாக இருந்து, தகுதி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை எனவும், பணி நியமனத்திற்கான போட்டி தேர்வு அரசாணையில் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தற்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் தற்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த இடங்களுக்கு நிரந்தர அடிப்படையில் முழு நேர ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் கோரிக்கையின்படி, பணி நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், கடந்த 2012 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஆர் வகை கேள்வித்தாளாக கொள்குறி முறையில் 2024 ஜனவரி 7 ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும், ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு, தேர்வு மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கில் சேர்க்கப்பட்டு, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணை 147ல், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிப்பெற்றவர்களுக்கு, தகுதிப்பெற்ற ஆண்டில் இருந்து ஒரு ஆண்டுடிற்கு 0.5 (பூஜியம் புள்ளி ஐந்து) மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி பணிக்கு தகுதி 2012 ஆம் ஆண்டில் பெற்றிருந்தால், 2023 ஆம் ஆண்டு வரையில் 11 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5.5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி பணிக்கு தகுதி 2013 ஆம் ஆண்டில் பெற்றிருந்தால், 2023 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
2014ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4.5 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2017ல் தகுதிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2019ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2022ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 0.5 (பூஜியம் புள்ளி ஐந்து) மதிப்பெண்களும், 2023ல் தகுதிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பூஜியம் மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்கப்படும் என்ற அறிக்கை கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், பகுதி 1ல் தமிழ் பாடத்தில் 40 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். 30 கேள்விகளுடன் 30 நிமிட தேர்வாக இருக்கும். இந்த தேர்வில், 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களின், முதன்மை தேர்வு விடைத்தாள் மட்டுமே திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பகுதி 2 தேர்வில் 150 கேள்விகள் இடம் பெறும், மூன்று மணிநேர தேர்வாக நடைபெறும்.
இதில் 150 கேள்விகள் இடம்பெறும். பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், இதர பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்கள் ஆக இருக்கும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் பணி போட்டித் தேர்வு எழுதுவதற்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்கள், www.trb.tn.gov.in/www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் https://trb1.ucanapply.com/apply_now லிங்கில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் கேட்கும் சான்றிதழ்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமன போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் செல்போனில் மற்றும் இமெயில் ஐடி சரியாக இருக்க வேண்டும், அதன் மூலமே தகவல்கள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மற்றும் அதற்கு இணையான படிப்புகள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தேவையான சான்றிதழ், இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தின் தடையில்லா சான்று, அரசு அதிகாரியின் கையெழுத்துடன் நகல்கள் இடம்பெறவேண்டும், தேர்வு கட்டணமாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினருக்கு 300 ரூபாயும், இதர பிரிவினருக்கு 600 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வின் பொழுது விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.
தொடர்ந்து தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6753 (Toll Free) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் trbgrievances@tn.gov.inஎன்ற முகவரியிலும் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.7,108 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள் துவங்க அமைச்சரவை ஒப்புதல்!