சென்னை:மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திமுக தரப்பு வாதம்
அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழ்நாடு கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார்.
அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கிய பின் தமிழ்நாடு இட ஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒன்றிய அரசுதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும். தமிழ்நாடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூற முடியாது எனவும், அந்த இடங்கள் மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே அதனை பின்பற்ற முடியும் எனவும் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கமளித்தார்.