சென்னை:தமிழ்நாட்டில் சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான பல்வேறு விவகாரங்களில், அதிமுக தங்களது எதிர்ப்பை கடுமையாக முன்னெடுத்து வருவதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று திமுக எதிர்ப்பு அரசியலை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேகப்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பிரதான எதிர்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பல்வேறு விவகாரங்களில் செயல்படாமல் மெளனம் காத்து வந்தது. இதற்கு, அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை விவகாரம் என அப்போது பேசப்பட்டது. இதனால், நாங்கள்தான் எதிர்கட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லும் நிலையும் ஏற்பட்டது. இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சுமார் 10 மாதங்கள் தொடர்ந்தது.
இதனால் அதிமுகவை கடந்து மற்ற விவகாரங்களில் அந்தக் கட்சியால் கவனம் செலுத்த முடியவில்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்திலும் அங்கீகாரம் பெற்றார். முக்கியமாக, சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவின் பொதுச் செயலளாராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.
அண்ணாமலை உடன் மோதிய ஈபிஎஸ்: இவ்வாறு ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி முழுமையாக அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். குறிப்பாக, இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, கொலை, கொள்ளை அதிகரிப்பு, பாலியல் வன்புணர்வுகள், கள்ளச்சாராயம் போன்ற விவகாரங்களில் எதிர்ப்பை பதிவு செய்த ஈபிஎஸ்ஸின் செயல்பாடுகள் பெரிதாக பேசப்படாமலே இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் அதிகமாக ஏற்பட்டது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நேரடியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. கூட்டணி கட்சியாக இருந்தாலும், கொங்கு பகுதியில் அண்ணாமலையின் வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை என கூறப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய பாஜக மேலிடம், எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இருக்கும் கருத்து மோதல்களை சரி செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்படுவது குறைந்தது. அதிமுகவும், பாஜகவும் தங்களுக்கான அரசியலை தனித்தனியாக செய்யத் தொடங்கினர். இந்த நிலையில்தான் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, 12 மணி நேர வேலை மசோதா, பிடிஆரின் ஆடியோ விவகாரம், திமுகவினருடைய சொத்துப்பட்டியல் வெளியீடு போன்ற விமர்சனங்கள் இதில் அடங்கும்.
இதன் தொடர்ச்சியாக, விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தை முழுமையாக அதிமுக கையில் எடுத்ததாகவே கருதப்படுகிறது. அண்ணாமலையும் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல நினைத்ததாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராய மரண விவகாரம் குறித்தும், டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் ஊழல் குறித்தும் ஆவணங்களை திரட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று மனு அளித்தார்.