இது குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜா, மாநில செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”கோவிட்-19 சிகிச்சைக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்வதை இந்திய மருத்துவச் சங்கம் வரவேற்கிறது. தமிழ்நாட்டில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு சில பரிந்துரைகளை அளிக்கிறோம்.
கோவிட்-19 நோய்க்கான சிகிச்சையை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சமூகப் பரவலாக மாறுவதை தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.
நகர்புறங்களுக்கு வெளியில் உள்ள 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கலாம். அனைத்து கோவிட் மருத்துவமனைகளையும் அங்கீகாரம் பெற்றவர் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். அதுபோல அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும், கோவிட் தொலைபேசி சேவை மையத்திற்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் சார்பில் மருத்துவர்களை அளிக்க தயாராக உள்ளோம். கோவிட் நோயாளிகளில் சாதாரண மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணமாக 10 நாட்களுக்கு மருத்துவமனை தங்கும் வசதி, கருவிகள், நிர்வாக கட்டணம் உள்பட 1,75,596 மருந்துகள், பரிசோதனை, உடைகள், முகக் கவசம் உள்ளிட்டவற்றுக்கு 56,224 என 2 லட்சத்து 31 ஆயிரத்து 820 கட்டணமாகவும், மருத்துவர்கள், நர்சுகள், உணவுக்கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு ஒரு நாளைக்கு 9600 கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.