தமிழ்நாட்டில் கோட்டையை பிடிப்பதற்கான யுத்தம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றிட வேண்டுமென்ற வேட்கையோடு அதிமுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. கேரளாவில் அக்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏகூட இல்லாத குறையை என்ன செய்தாவது போக்கிவிட வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தனது கொடியை பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் பாஜக காலூன்ற முடியாத மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ்நாடு, மற்றொன்று கேரளா. மேலும், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது. தமிழ்நாடு பாஜக தலைவரையும் மாற்றி, பிற கட்சிகளிலிருந்து முக்கியப் பிரமுகர்களை தனது கட்சிக்கு இழுப்பது, திரைப்பிரபலங்களை வலைவீசி பிடிப்பது என பிரம்மபிரயத்தனத்தில் இறங்கியுள்ளது அக்கட்சி.
எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்திட வேண்டுமென, அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் படாத பாடு பட்டார். அவர் தெலங்கானா ஆளுநரானவுடன், தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற முருகன் திமுகவின் வி.பி. துரைசாமி உள்ளிட்ட பலரை பாஜகவில் இணைத்தார்.
எம்பி சீட் கொடுக்கப்படாத அதிருப்தியில் இருந்த துரைசாமியோடு அந்தக் கணக்கு நின்றுவிடும் என்று அறிவாலயம் நினைக்க, ஆயிரம் விளக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ கு.க. செல்வத்தை பாஜகவில் இணைத்து அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் முருகன். காங்கிரஸில் இருந்த குஷ்புவும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணனும் பாஜகவில் இணைந்தார்.
வட மாநிலங்களில் அரங்கேற்றும் பாஜகவின் சித்து விளையாட்டை அக்கட்சி தமிழ்நாட்டில் அதுவும் திமுகவிலும் அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறது என்று பலரால் பேசப்பட்டது. சரவணனை கட்சியில் சேர்த்தது மட்டுமின்றி காலையில் கட்சியில் சேர்ந்த அவருக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மாலையே கொடுத்தது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தல் களத்தை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்ள பாஜக தயாராகிவிட்டது என்றே பலரால் கருதப்படுகிறது.