சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில், மாநில தலைநகர் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவும், முடிந்த வரையில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் போக்குவரத்துத் துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி, சென்னையில் 5 இடங்களில் இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்து, தினசரி பேருந்துகள், முன்பதிவு பேருந்துகள், முன்பதிவில்லா பேருந்துகள் என இயக்கப்பட்டன. மாதவரம், கேகே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யபட்டது.
இதில் கடந்த நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை தலைநகரிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லவும், நாளை (நவ.13) முதல் வருகிற 15ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்குத் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.