சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் மாலை மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, கடந்த ஒரு மாத காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ள மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
மேலும், உடல் ரீதியான பிரச்னைகள் இருந்ததால் கடந்த மாதம் சில நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, ஓமந்தூரார் மருத்துவமனையில் தங்கி, ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் குழு அவரை முழு பரிசோதனை செய்து, உடல் நலம் தேறிய பின்பு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும், லேசான நெஞ்சுவலி, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் வலி இருந்ததாலும் போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் மீண்டும் புழல் சிறையிலிருந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரபட்டுள்ளார்.
அங்கு ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்த பின்பு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவரை இன்னும் சில பரிசோதனைக்காக ஓமதூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினரால் இருதயவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதய நிபுணர்கள் குழு தலைவர் மனோகர் தலைமையில் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குறையாத ரத்த அழுத்தம், குடல் புண், வயிற்றுப்புண் பிரச்னைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்காக தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருவதாலும், உணவுகள் முறையாக உட்கொள்ளாமல் இருந்து வருவதாலும் இந்த பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தொடர்ந்து ரத்த அழுத்தம் குறையாத காரணத்தினால், அதற்கான சிகிச்சை பரிசோதனைகள் நடத்த உள்ளதாகவும், உணவுக்கு முன்பாக இரத்தப் பரிசோதனைகள், அதன் பிறகு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு அடுத்த கட்ட சிகிச்சை குறித்து தெரிவிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:"நூறு சதவீதம் கப் நமதே" - நடிகர் ரஜினிகாந்த் உற்சாக பேட்டி!