உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகளவில் இருக்கிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 28ஆயிரத்து 732 பேர் உயிரிழந்தும், 1, 192, 915 பேர் பாதித்தும் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 626 பேர் உயிரிழந்தும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதில் சென்னையில் கரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு போதிய கவனிப்பு வசதிகள், மருந்துகள், உணவுகள் என அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரித்தபோது பல்வேறு பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் என சிற்றுண்டியுடன், பால், முட்டை, காய்கறி வகைகள், பழச்சாறு, சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுவதால் அவற்றை பற்றி குழப்பங்கள் இல்லை என்கிறார்கள். அதேசமயம், சுகாதார வசதிகள் என வரும்போது போதிய கழிவறைகள் இல்லாமல் இருப்பதும், அவை அடிக்கடி சுத்தப்படுத்தும் நிலையும் எப்போதும்போல் கடைப்பிடிக்கப்படுதில்லை என்பது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
சென்னையில் இன்றைய நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 839 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் வெளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குறைந்தது 14 நாள்கள் வரை சிகிச்சை பெறும் இவர்களுக்கு மேற்கண்ட பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். மற்றபடி உணவு, மாத்திரைகள் வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் குறை சொல்லும் நிலை இல்லை என்கிறார்கள் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள்.