சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக தலைமை அலுவலத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையில் மனு அளித்த நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விவகாரம் உட்கட்சி பிரச்னை. கட்சி அலுவலகத்திற்குள் நடந்த பிரச்னைக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்'' என கேள்வி எழுப்பிய அவர், ''அலுவலகத்தின் உள்ளே பாதுகாப்பு அளிக்க முடியாது. வெளியே உரிய பாதுகாப்பு அளிக்கபட்டது’’ எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''திமுக இரண்டாக பிரிவு பட்ட நேரத்தில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா போதிய பாதுகாப்பு அளித்தார்’ எனக்கூறினார். மீண்டும் பேசிய முதலமைச்சர், ''நாங்கள் பிரச்னை ஏற்பட்ட போது உங்களைப் போல் அடித்துக் கொள்ளவில்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுக அலுவலகத்தில் வன்முறை வெறியாட்டம் யாரால் நடந்தபட்டது? யார் அத்துமீறி செயல்பட்டார்கள்? யார் வெறியாட்டத்தில் ஈடுபட்டார் என நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் நிராயுதபாணியாக இருந்தோம். கட்சியின் நுழைவு வாயில் பூட்டப்பட வேண்டிய அவசியம் என்ன?'' என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.