சென்னை:தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப்படிப்புகளில் சேர்வதற்கும், அதில் வேலை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் தமிழ்நாடு மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில் கூறியதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு , போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தெரிந்துக்கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.
டிப்ளமோ நர்சிங் படிப்பானது 25 அரசு கல்லூரிகளில் 2,060 இடங்கள் உள்ளது. சான்றிதழ் படிப்புகளில் 27 கல்லூரிகளில் 8,596 இடங்கள் உள்ளன. ஓராண்டு சான்றிதழ் படிப்பின்போது திறனை வளர்த்துக்கொண்டு, படிப்பு முடித்தவர்கள் உடனே மருத்துவமனைகளில் பணியில் சேரலாம். இதனால் உங்களின் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக அமையும். 3ஆம் தேதி காலை வரையில், 26,731 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 8,541 விண்ணப்பங்கள் கட்டணங்களை செலுத்தியும், கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 9,261 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன்னர் முழுவதும் படித்துப்பார்த்து விட்டு, அதில் உள்ள விவரங்களை தெரிந்துக் கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். அரசு மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.