சென்னை : கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். இவர் அந்த பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
குறிப்பாக வீட்டு வசதி வாரியத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை முறைகேடாக ஜாபர்சேட் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ஜாபர் சேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின் ஐ.பி.எஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக கூறி ஜாபர் சேட் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் ஜாபர் சேட் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறும் அவருக்கு உரிய பதவியை வழங்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டது.