சென்னை:இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ’அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த 1976ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்நிறுவனத்தில், தற்போது 3,569 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், ஊழியர்களின் ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் அனைத்து பணப்பலன்களையும் விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 29.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் 1,093 நபர்கள் பலன் அடைந்துள்ளனர்.
தற்போது இக்கழகத்தில் 677 தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளைக் காலி செய்யாமல் உள்ள நிலையில், அவர்களது சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.