சென்னை:சென்னை- வில்லிவாக்கம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் தம்பதிகளான பசுபதி - மங்களேஸ்வரி ஆகிய இருவரும் கடந்த 1982ஆம் ஆண்டு வில்லிவாக்கம் என்.ஆர். கார்டன் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பிலான பங்களா வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.
அதன் பின் கடந்த 2011ஆம் ஆண்டு பசுபதி தனது சொத்துக்களை மூத்த மகள் சித்ரா தேவி, தனது பேர குழந்தைகள் பெயரில் தான செட்டில்மென்டாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில், மனைவி மங்களேஸ்வரியின் மறைவுக்குப் பிறகு, பசுபதி அதே வீட்டில் உடல்நிலை சரியில்லாத நிலையில் தனியாக தங்கி வந்துள்ளார்.
முதியவருக்கும், செவிலியருக்கும் திருமணம்
அப்போது, லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பசுபதியின் மகள் சித்ரா தேவி, தனது வயதான தந்தையை கவனிப்பதற்காக அம்பிகா (58) என்ற பெண்மணியை மாத ஊதிய அடிப்படையில் பணியமர்த்தியுள்ளார். மேலும், அம்பிகா மூலம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த செவிலியரான சினேக லதா (68), கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி (40) ஆகியோர் பசுபதியை கவனித்துக்கொள்ள அந்த வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், பசுபதி கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதற்கிடையில் 2018ஆம் ஆண்டு பசுபதியை செவிலியரான சினேக லதா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பசுபதி உயிரிழந்த நேரத்தில் மகள் சித்ரா தேவி தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக வந்துள்ளார்.
அப்போது விசிக பிரமுகரான வழக்கறிஞர் அபுன் (எ) தயாள மூர்த்தி, அம்பிகா, சுமதி, சினேக லதா உள்ளிட்டோர் கூட்டாக சித்ரா தேவியை தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என தடுத்துள்ளனர்.
ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்
பின் ஒரு வழியாக இறுதிச் சடங்குகள் முடிய, சில நாள்களுக்குப் பின் தயாள மூர்த்தி, அம்பிகா, சுமதி, சினேக லதா ஆகியோர் வீட்டைவிட்டு செல்ல முடியாது எனவும், சினேக லதாவை பசுபதி திருமணம் செய்துள்ள நிலையில், தங்களுக்கு ரூ.1 கோடி கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் எனவும் சித்ரா தேவியிடம் திட்டவட்டமாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தொலைபேசியில் சித்ரா தேவியை தொடர்புகொண்டு தொடர்ந்து ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளால் பேசியும் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தயாள மூர்த்தி உள்ளிட்டோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் வில்லிவாக்கம் தனிப்படை காவலர்கள் நில அபகரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வி.சி.க பிரமுகரும் வழக்கறிஞர் அபுன் (எ) தயாளமூர்த்தி (38), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா (58), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சுமதி (40), சினேகலதா (68) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது நில அபகரிப்பு, திருட்டு, அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் அருண் என்பவரை வில்லிவாக்கம் காவலர்கள் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க:குடிபோதையில் காவலர்களிடம் வாக்குவாதம்: விசிக வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு