நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் மீண்டும் பாஜகவே அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கி இவர்கள் அமைத்த மெகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மட்டுமின்றி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை படுதோல்வி அடைய செய்ததும் ரவீந்திரநாத்துக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.
கடந்த முறை நடந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களை வென்றாலும் ஒரு மத்திய அமைச்சர் பதவியை கூட பெறவில்லை. ஆனால் இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருப்பதால் எப்படியும் அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என்ற மனக்கணக்கில் அதிமுக இருந்தது. குறிப்பாக அதிமுகவில் இருந்து வெற்றிபெற்ற ஒரே எம்.பி என்பதால் நிச்சயம் மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று ஓ.பி.ஆர் ஆதரவாளர்கள் காலரைத் தூக்கிக்கொண்டு வலம் வரத் தொடங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலாக தேனி பகுதியில் நடக்கும் விழாவில் அவரை சிறப்பு அழைப்பாளராக போட்டு, அழைப்பிதழில் அவரது பெயருக்கு பின்னால் மத்திய அமைச்சர் என்று பதிவிடவும் அவரது ஆதரவாளர்கள் தவறவில்லை.
மேலும், தனது மகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று விட்டால் 'மேலிடத்தில்' நெருக்கமாகலாம் என பன்னீரும் கணக்கு போட்டு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு செக் வைக்க நினைத்த முதலமைச்சர் ஈபிஎஸ், தனக்கு வேண்டியவரும் ஓ.பி.எஸ் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க அதிமுக முக்கிய உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார். தனது மகனை அமைச்சராக்கலாம் என்று எண்ணியிருந்த பன்னீர் மட்டும் அதில் கையெழுத்து போடவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருதரப்புக்கிடையேயும் சத்தமில்லாமல் பனிப்போர் நடந்து வந்தது.