சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், கேரம் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில் ஒருவரைக் கத்தியால் குத்தியுள்ளார். 2002ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அரும்பாக்கம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த ராதாகிருஷ்ணன், சம்பவம் நடந்தபோது, தான் 18 வயது பூர்த்தியடையாத சிறார் எனக் கூறி, பிறப்புச் சான்றிதழ், பள்ளிமாற்றுச் சான்றிதழ்களைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த பின் பெறப்பட்டுள்ள பள்ளிமாற்றுச் சான்றிதழ்களை ஏற்க முடியாது எனக் கூறி, ராதாகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை, 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தார்.
வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகள் பல்டி அடித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பல வழக்குகளில் அரசுத் தரப்புச் சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறிவிடுவதாகவும், அது அரிதானதல்ல எனவும் கூறினார். அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்தனர் என்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:’சசிகலாவால் அரசியல் மாற்றம் நடக்கும்’ - சுப்பிரமணியன் சுவாமி