டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இட ஒதுக்கீடு கிளப் மாணவர் நாசர் கூறும்போது, "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி ஒதுக்கீட்டில் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியலின மாணவர்களுக்கு 15 விழுக்காடும், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடும் என்ற அடிப்படையில் தான் மாணவர்களுக்கு விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இந்த இடங்கள் தவிர, மீதமுள்ள 40 விழுக்காடு இடங்கள் பொதுப்பிரிவில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விடுதியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் சமூக அநீதியைப் பின்பற்றி வருகின்றனர். பொதுப்பிரிவில் உள்ள 40 விழுக்காடு இடங்களை எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முழுக்க முழுக்க முற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்கின்றனர்.