சென்னை:ஆவடி அடுத்த வெள்ளனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா (52). இவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மகள் மற்றும் மகன் உள்ளனர். கடந்த 4ஆம் தேதி இரவு 1 மணியளவில் சிவாவிற்கு நெஞ்சு வலி காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு, ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குச் சேர்த்த அரை மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மறுநாள் அவரது இறுதிச் சடங்கு முடிந்து நிலையில் பின்னர் அவர் அணிந்திருந்த நகையைப் பரிசோதித்தபோது அவர் கையில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க வளையல் காப்பு காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு, மருத்துவ நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளித்து 25 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து திருடப்பட்ட நகையை மீட்டுத் தரக் கோரி அம்பத்தூர் நீதிமன்ற சங்க வழக்கறிஞர்களுடன் சென்று புகார் அளித்தனர்.