சென்னை: கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியை சேரந்த ரவுடி தீனதயாளன்(22). இவன் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக, இவர் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரவுடி தீனதயாளனை அறிவுசார் கழகம், குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்து இருந்தது.
இதை தொடர்ந்து, அவர் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று (மே 16) இரவு ரவுடி தீனதயாளன், விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் உள்ள பஞ்சர் கடை வாசலின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், ரவுடி தீனதயாளன் மீது திடீரென நாட்டு வெடிகுண்டு (பாஸ்பரஸ் குண்டு) ஒன்றை எடுத்து வீசினர்.
அப்போது வெடிகுண்டு தவறி பஞ்சர் கடை மீது விழுந்தது. அது வெடித்ததன் காரணமாக, பஞ்சர் கடை முற்றிலும் சேதம் அடைந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட ரவுடி தீனதயாளன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவர் ஓடுவதை பார்த்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இரண்டு பேர், ரவுடி தீனதயாளனை துரத்தி சென்று கொலை செய்ய முயற்சி செய்தனர்.
அந்த பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வெளியே வந்த போது, ரவுடி தீனதயாளன் மீது, கத்தி வீசி தாக்குதல் நடப்பதை அறிந்து, அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். அவர்கள் சுதாரித்துக் கொண்டதால், உடனடியாக, அவ்விடத்தை விட்டு பைக்கில் தப்பிச் சென்று விட்டனர். இந்த நிகழ்வில், ரவுடி தீனதயாளன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.