தமிழ்நாடு ஊர்க்காவல் படை, கடந்த 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஐம்பத்தி எட்டு வருடமாக செயல்படும் ஊர்காவல் படை, காவல் துறையுடன் இணைந்து பணி புரிவதற்காக உருவாக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, இந்த ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் வேலை தராமல் மாதம் ஐந்து நாள் மட்டும் பணி கொடுத்தால் போதும். மற்ற நேரத்தில் வேறு வேலை பார்க்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஊர்க்காவல் படையினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் கரோனா ஊரடங்கு பணிக்காக ஊர்க்காவல் படையினரை முழுமையாக மாதம் முழுவதும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 15 ஆயிரத்து 562 ஊர்க்காவல் படையினர் காவல் துறையினருக்கு உதவி புரிந்தனர்.
சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கமாக வழங்கும் தின ஊதியம் 560 ரூபாய் மற்றும் 150 ரூபாய் கரோனா பணி ஊதியம் என்ற அளவில் ஊதியம் வழங்கப்பட்டது. கரோனா பணியிலும் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதத்தில் ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்தற்கான சம்பளத் தொகை அரசிடமிருந்து வராமல் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் (ஆக.26) ஊர்க்காவல் படையினரைக் கரோனா பணிக்காக பயன்படுத்த வேண்டாம் என, டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக யாரும் அந்தந்த காவல் நிலையத்தில் சென்று பணி கேட்க வேண்டாம் என உயர் அதிகாரிகள் ஆடியோ மூலம் தெரிவித்துள்ளனர். அப்படி பணி செய்தாலும் சம்பளம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் ஊர்க்காவல் படையினர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் பழைய நிலைமை போல் மாதம் ஐந்து நாள் மட்டுமே பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இனி மீண்டும் செப்டம்பர் மாதம் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். கரோனா பேரிடர் முழுவதும் தீராத நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட பணி நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக ஊர்க்காவல் படையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்காக வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். கரோனா காலத்தில் வேலை கிடைக்காத நிலையில், மற்ற வேலைகளை எவ்வாறு செய்வது என்று கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரத்து 575 ஊர்காவல் படையினரும், வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே தமிழ்நாடு காவல்துறை மாதம் முழுவதும் பணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்காவல் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சொகுசு பேருந்தைக் கடத்திய இருவர் கைது