சென்னை: முகப்பேரை சேர்ந்தவர் மணிகண்டன்(30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன், கடந்த 27ஆம் தேதி கோயம்பேட்டில் ஒரு பெண்ணுடன் சென்று வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனை வழிமறித்து உள்ளார்.
பின்னர் தான் போலீஸ் எனக் கூறி அந்த நபர் ஐடி கார்டை காண்பித்து, நீ பெண்ணுடன் சென்று வந்ததை உனது பெற்றோரிடம் கூறி விடுவேன் எனவும், சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மணிகண்டனை மிரட்டியுள்ளார். பின்னர் சட்ட விரோத செயலுக்கான அபராத தொகையை செலுத்துமாறு அவரது ஜிபே எண்ணுக்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி விட்டு அழைக்கும் போது வர வேண்டும் என அந்த நபர் மணிகண்டனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனை அடுத்து மறுநாள் மீண்டும் அந்த நபர் மணிகண்டனை சந்திக்க வேண்டும் என அழைத்து உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என 65 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இதே போல பல தவணைகளில் 92 ஆயிரம் பணம் மற்றும் நான்கு கிராம் தங்க நகையை அந்த நபர் மணிகண்டனிடமிருந்து மிரட்டி பறித்துள்ளார்.
தொடர்ச்சியாக பணம் கேட்டு அந்த நபர் மிரட்டி வந்ததால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் சூளைமேடு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த நபர் வந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, சூளைமேட்டில் வசித்து வரும் பெண் காவலரின் இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்துள்ளது.