தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்து, வேட்பாளர் பட்டியல் கட்சிகளின் சார்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக பாஜகவிற்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றது.
பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாட்டிற்கு வந்த அமித் ஷாவை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாஜகவிற்கான தொகுதிப்பங்கீடு நாளைக்குள் (மார்ச் 3) இறுதிசெய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவதற்காக உள் துறை அமைச்சர் அமித் ஷா நாகர்கோவிலுக்கு மார்ச் 7ஆம் தேதி வரவுள்ளார்.
அதேபோல் மார்ச் 10ஆம் தேதி பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவும் தஞ்சாவூரில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.