புதுச்சேரி:உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.24) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வருகிறார். இதனால், இன்று (ஏப்.23) இரவு சென்னை அருகேவுள்ள ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து நாளை காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு அங்கு இறங்குகிறார்.
அவரை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்று, அரவிந்தர் அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு ஸ்ரீஅரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 12:40 மணிக்கு ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவருந்திவிட்டு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.
2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 காவலர்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவது உள்பட பல திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.