சென்னை எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், சட்டவிரோதமாக மதுபானத்தை வீடு தேடி டெலிவரி செய்வதாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆன்லைனில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்துவந்த ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஹரி (31) மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (27) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சுமார் 235 மதுபான பாட்டில்களையும் காவல் துறை பறிமுதல் செய்தது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் பணி செய்துவந்ததும், தற்போதுள்ள ஊரடங்கைப் பயன்படுத்தி இருசக்கர வாகனம் மூலம் சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்கி, உணவு டோர் டெலிவரி செய்வது போல், கடத்தி வந்த மதுபாட்டில்களை ஹரியின் வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.
பின் செல்போன் மூலம் மதுபானங்களை ஆர்டர் செய்தால், உணவு டெலிவரி செய்யும் பையில் மதுபானங்களை கொண்டுச் சென்று, வீடு தேடி சட்டவிரோதமாக மதுபானத்தை சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.