சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில், "வீடு என்பது பலரது கனவு!
கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு!", என குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதி திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு எனவும் இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. கருணாநிதி கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் கருணாநிதி என குறிப்பிட்டுள்ளார்.